Labels:

மீண்டும்... பூம்... பூம்... ஐ.டி! ஒரு லட்சம் வேலைகளுக்கான ஓப்பனிங்


ரெசஷன்... சாப்பிட மறுக்கும் குழந்தைகள் 'பூச்சாண்டி'க்குப் பயப்படுவதைக் காட்டிலும்,
ஐ.டி. இளைஞர்களை அதிகமாகப் பயமுறுத்திய வார்த்தை இது!
ஒரு சில மாதங்களிலேயே உச்சத்துக்குக் கொண்டுசென்று வாழ்வின் பல வசதிகளை அனுபவிக்கக் கொடுத்த 'சாஃப்ட்வேர் கம்பெனி' வேலை 'ஜெயன்ட் வீல் சவாரி'போல சரேலென்று தரையில் வீழ்ந்ததற்குக் காரணம்... ரெசஷன். சடாரென்று சரிவது மட்டுமல்ல; திடுதிடுப்பென்று துள்ளி எழுவதும் ஐ.டி. துறையின் அடையாளம்!
'கீழே விழுந்தால் எழுந்திருக்க சிரமப்பட நான் யானை இல்லை; சட்டுனு மண்ணை உதறிட்டு எந்திரிக்கிற குதிரை!' என்று ரஜினி ஒருமுறை தன்னைப்பற்றிக் குறிப்பிட்டார். அந்தத் தகுதி ஐ.டி. துறை வேலைகளுக்கும் பொருந்தும். இத்தனைக்கும் அடிப்படைக் கட்டமைப்பு காரணமாக உலகப் பொருளாதாரத் தேக்கம் அப்படி ஒன்றும் நம் நாட்டு வேலை வாய்ப்புகளை அடைத்துவிடவில்லை. மாறாக, அதிகரிக்கத்தான் செய்திருக்கின்றன.
'அப்போ... நிறையப் பேரை வேலையைவிட்டுத் தூக்குனாங்களே... அதுக்கு என்ன காரணம்?' என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்கலாம். ஆம்... தூக்கினார்கள், துரத்தி அடித் தார்கள், 'பிங்க் ஸ்லிப்'பினார்கள். ஆனால் யாரை? அந்தச் சமயத்தில் போதிய திறன்கள் இல்லாமல், நேரத்தையும் வளங்களையும் வீணாக்கிக்கொண்டு இருந்தவர்களை வெளியே அனுப்பினார்கள். கையில் இருக்கும் நிதி போதாது என்ற சமயத்தில், இன்னும் செலவழித்து அவர்களுக்கு எதற்காகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைத்து வெளியே அனுப்பினார்கள். அதை மேலாண்மை மொழியில், 'காஸ்ட் கட்டிங்' என்பார்கள். அப்போது திறமையாக உழைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது புரொமோஷன், சம்பள உயர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. சரி, இப்போது ரெசஷன் சுனாமி ஓய்ந்துவிட்டதா?
உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு, ஐ.டி. துறை வேலைவாய்ப்புகள் பிரகாசம் அடைந்து உள்ளன என்பது சர்க்கரைச் செய்தி. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக ஐ.டி. நிறுவன மனிதவளத் துறையினர் படபடக் கின்றனர். 'ஃப்ரெஷ்ஷர்' ஆக இருந்தாலும், அனுபவசாலியாக இருந்தாலும், இந்தச் சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது..?
டிப்ஸ் தருகிறார்கள் அனுபவஸ்தர்கள்.
"எங்குமே வேலை இல்லை என்பது தவறான கருத்து. வேலைக்குத் தகுதியான ஆட்கள் கிடைப்பது இல்லை என்பதுதான் சரி. தேவைப்படும் தகுதியை வளர்த்துக் கொள்பவர்களைக் கொத்திச் செல்லக் காத்திருக்கின்றன, முன்னணி மென்பொருள் நிறுவனங்கள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் மென்திறன் பயிற்சி வல்லுநர் பிரபு.
"பொதுவாக, 44 சதவிகித நிறுவனங்கள் தங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதியற்ற நபர்களிடம் இருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஒன்று, நிறுவனங்களுக்குத் தேவையான நபர்கள் வேறு துறைகளில் இருக்கிறார்கள் அல்லது தங்களுக்குப் பொருந்தி வராத துறையில் இளைஞர்கள் மல்லுக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்தால், வேலைவாய்ப்புகள் சமமாக இருக்கும்.
விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாகத் தரவும் பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடி சூழலில், பணியாற்றிக்கொண்டு இருக்கும் வேலையைவிட்டால், அதற்கு இணையான இன்னொரு வேலையைத் தேட குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், இப்போது அதிகபட்சம் மூன்று வாரங்களிலேயே வேறு வேலை கிடைத்துவிடும் என்பதால், எந்த ஒரு நிறுவனமும் தன் பணியாளர்கள் மனதில் அந்த எண்ணமே ஏற்படாத வகையில் பரிவு காட்டி நடத்துகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இருக்கும் பணியாளரைப் போகச் சொல்லிவிட்டு, மீண்டும் புதிதாக ஒரு பணியாளரைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை நியமிப்பது வரையிலான நடவடிக்கைகள் நிறையச் செலவுகள் பிடிப்பதாக இருக்கும். அந்தச் செலவையும் நேர விரயத்தையும் தவிர்க்கவே அனைத்து நிறுவனங்களும் நினைக்கின்றன. எந்தப் பெரிய பல்கலைக்கழகத்தில் படித்துச் சென்றாலும், மென்பொருள் நிறுவனங்களில் 'என்ட்ரி லெவல்' ஆகத்தான் வேலைக்குச் செல்ல முடியும். அங்கு முதலில் உங்களை 'unlearn' செய்வார்கள். பின்பு, அவர்களுக்குத் தேவையானபடி உங்களுக்குப் பயிற்சிகள் அளித்து 'relearn' செய்யவைப்பார்கள். சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை 'அப்டேட்' திறமை மிகவும் அவசியம், அதிமுக்கியம்!
நெருக்கடி சூழலில் பல நிறுவனங்கள் தாங்கள் மேற்கொண்ட புராஜெக்ட்களை பட்ஜெட் பத்தாது என்ற காரணத்துக்காக நிறுத்திவைத்தன. தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்து இருப்பதால், அந்த வேலைகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள். அவற்றைச் செய்து முடிக்கத் தொழிலாளர்கள் தேவை என்பதால், இனி எங்கும் 'ஆட்கள் தேவை'!" என்று முடிக்கிறார் பிரபு.
னித வளத்துறை பயிற்சியாளர் ராமன் நமது இளைஞர்களின் பலவீனப் பக்கம் குறித்துப் பேசுகிறார். "நமது இந்திய இளைஞர்கள் எவ்வளவு கடினமான வேலை களையும் செய்து முடித்துவிடுவார்கள். ஆனால், அவர்களின் மிக முக்கியமான குறைபாடு... சுய ஒழுக்கம் இன்மை. அதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இழக்கிறார்கள். அறிவும் திறன்களும் இன்று கண்ணால் பார்க்க முடிவது. ஒரு செயலைச் செய்யச் சொல்வதன் மூலம், உங்களுடைய அறிவையும் திறனையும் சோதித்துப் பார்த்துவிட முடியும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி முதல் 18 மாதங்களில், எந்தத் துறை சார்ந்த நிறுவனங்களாக இருந்தாலும், 40 சதவிகிதப் பணியாளர்கள் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்வதில் தவறுகிறார்களாம். காரணம், தலைமைப் பண்புகள் இல்லாமல் போனதுதான். மற்றவருடன் தொடர்புகொள்ளும் திறன் இருக்கிறது. ஆனால், அவர்களின் நிலையில் இருந்து பிரச்னையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. இதை 'எம்பதி கம்யூனிகேஷன்' என்போம்.

படித்த இளைஞர்களை நாம் நான்கு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, வேலையில் இருப்போர், வேலை இல்லாதோர், வேலைக்குச் செல்லாதோர், வேலைக்குத் தகுதி இல்லாதோர். இதில் நான்காவது பிரிவினருக்கு முறையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களின் உழைப்பாற்றலையும் பயனுள்ளதாக்கலாம். இன்றைக்குப் பெரும்பாலான நிறுவனங்களில் 'அறிவுப் பணியாளர்கள்' (Knowledge Workers) தான் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். அதனால், உயர் பதவிகளை அடைய கடும் போட்டிகளைச் சந்தித்தாக வேண்டும். அதற்கு நிறைய உழைக்க வேண்டும். முன்பு, மேலாளர் பதவியை அடையக் குறைந்தது 20 ஆண்டுகளாவது பணி அனுபவம் இருக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. நான்கு முதல் ஐந்து வருடங்களில் ஒருவர் மேலாளராக வந்துவிட முடியும். வழிநடத்துகிற திறன்களும், குழுவாக இணைந்து செயலாற்றுகிற மனப்பான்மையும் இருந்தால், தலைமைப் பதவிகள் உங்களை நோக்கி வரும்.

பொருளாதாரம் சரிவடைந்து, தற்போது மீண்டு எழுகிற இந்தச் சமயத்தில், இந்த வேலைக்குத்தான் செல்வேன் என்று வருடக்கணக்காகக் காத்திருக்காமல், முதலில் எந்த வேலை கிடைக்கிறதோ... அதில் சேர்ந்துவிடுங்கள். அதில் பணியாற்றிக்கொண்டே உங்களுக்குப் பிடித்த வேலை அல்லது, நீங்கள் விரும்புகிற வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருங்கள். ஏனென்றால், தனியாக ஒன்றுமே இல்லாமல் செல்வதைக் காட்டிலும், சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தின் படி களை அடைவது நல்லதுதானே!" என்று ஆலோசனை தருகிறார் ராமன்.
'தனக்கு வேலை கிடைக்குமா என்பதுபற்றி ஒருவன் கவலைப்படத் தேவை இல்லை. தான் தேர்ந்தெடுத்த துறையில் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டே இருப்பவனுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும்!' என்ற தாமஸ் ஜெஃபர்சனின் வரிகளின் அர்த்தம் புரிந்தவர்தானே நீங்கள்?!
நடைமுறை மாற்றம்!
பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பிறகு, மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் மாறி இருக்கின்றன. தற்போது 'டேலன்ட் மேனேஜ்மென்ட்'டில்தான் நிறுவனங்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றன!
'ரெஃபெரல்ஸ்' நல்ல சாய்ஸாகப் பயன்படுகிறது. 'விண்ணப்பிப்பவர் எப்படிப்பட்டவர்?' என்பதைத் தெரிந்துகொள்ள, நிறுவனங்கள் தனியாகச் செலவழித்துக்கொண்டு இருக்காது. இதற்கு முன் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் என்ன மதிப்பைச் சம்பாதித்து இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவே விரும்புகின்றன. மேலும், பெரும்பான்மையான நிறுவனங்கள் உயர்மட்டத்தில் ஒரு வேலை காலியாக இருக்கிறது என்றால், தங்கள் பணியாளர்கள் இடையிலேயே நேர்முகத் தேர்வுகள் வைத்துத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள்!
சமூக வலைதளங்கள் மூலமும் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். புவியியல்ரீதியாகப் பரந்துபட்ட நிறுவனங்கள், இந்தத் தளங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான தகுதிகள் இருக்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இ-கான்ஃபரன்ஸ் மூலம் தேர்வு நடத்தி, அப்போதே பணி நியமனக் கடிதத்தையும் தந்துவிடுகிறார்கள்!
சில நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கள் போன்றவை நடத்தினால் அதிக நேரம் செலவாகும் என்பதால், கல்லூரிகளை மாணவர் களின் புரொஃபைல்களை அனுப்பச் சொல்கிறார்கள். கவனிக்க, ரெஸ்யூம்கள் அல்ல. அதைப் பெற்றவுடன், யார் சிறந்த தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதைவிட, யார் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான தகுதிகளுடன் இருக்கிறார்களோ... அவர்களைத் தேர்வு செய்கிறார்கள்!
அதிக வேலை... அதிக சம்பளம்... இது மட்டும் அல்லாமல் புரொமோஷன், கார், வீடு போன்ற வசதிகளையும் செய்து தருவது பணியாளர்களைத் தக்கவைப்பதற்கான ஒரு சில உத்திகள்!


பொறியியல் பட்டதாரிகள் கவனத்துக்கு...
மெட்ரோ நகரங்களைவிட 'டையர் 1', 'டையர் 2' ஆகிய இடைப்பட்ட நகரங்கள் மிக விரைவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்!
டெலிகாம் துறையினால் உலக மய மாக்கலின் இரண்டாம் கட்டத்தை அடைந்து இருக்கிறது நம் நாடு. மென்பொருள் நிறுவனங்களுக்கு நிகராக இதிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதால், 'ஃப்ரெஷ் ஹெட்கவுன்ட்' செய்யப்படலாம்!
பெங்களூரு போன்ற சிலிக்கான் நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் புராஜெக்ட்டுகளுக்கு அமெரிக்காவைச் சார்ந்து இருந்தன. அதனால்தான் இடையில் சின்ன சறுக்கல். ஆனால், இப்போது பல நாடுகள் புதிய சந்தைகளை ஏற்படுத்தி இருப்பதால், அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை இல்லை!
எல் 1 விசா பெற்று இருப்பவர்கள் இந்த ஆண்டில் மட்டும் 50,000-க்கும் மேல் இருப்பார்கள். ஒரு தேசத்தில் இருக்கும் 'இன்ட்ரா கம்பெனி டிரான்ஸ்ஃபர்' எனப்படும் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, இன்னொரு தேசத்தில் இருக்கும் அதே நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்வதில் நிறையப் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் இப்படி நிறைய நிறுவனங்கள் இருப்பதால், பலரும் வெளிநாடு செல்லவே விரும்புகிறார்கள்!
ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை விட அதிக வேலைவாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைத்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். 45:55 என்கிற விகிதத்தில் ஐ.டி. நிறுவனங்களிலும், சேவைத் துறைகளிலும் பணியாற்றுகிறார்கள் பெண்கள்!

0 comments :

Post a Comment